மூலப் பிரதியைச் சிதைக்காமல் வருமா மொழிபெயர்ப்பு?
ஆகஸ்ட் 11, 2011 கருத்துத் தெரிவிக்கவும்
பொதுவாக, படைப்பாளிகள் கடவுள்களைப் போலக் கருதப்படுவதும், மொழி பெயர்ப்பாளர்கள் வெறும் மொழிப் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றவர்களாகவும் படைப்பாக்க ஆற்றல் இல்லாதவர்களாகவும் மட்டுமே கருதப்படுவதும் இன்றளவும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள் செய்து வரும் பணி ஓர் அறிவியல் பணியா, அல்லது ஒரு கலையா என்பது குறித்த விவாதம் சர்வதேச அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது… இவற்றில் ஏதேனும் ஓர் அம்சத்தை மட்டுமே மொழி பெயர்ப்பாளரின் பணியாகக் கருதுகின்ற ஒரு தலைப்பட்சமான கண்ணோட்டம் வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் மத்தியில் மட்டுமின்றி, சில மொழிபெயர்ப்பாளர்கள் மத்தியிலும் நிலவி வருவதை நாம் காண முடிகின்றது.
இந்த அளவிலாவது மொழி பெயர்ப்பு பணி ஒரு விவாதப் பொருளாக இருந்து வருகின்றதே என்று நாம் ஆறுதல் அடைய வேண்டிய நிலைமைதான் இன்றைய சர்வதேசச் சூழலில் உள்ளது. ஆனால் தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரையில் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் படைப்புகளுக்கு நிகராக மொழிபெயர்ப்புகளை நிறுத்தி விவாதிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ச்சியடையவில்லை. அதே நேரத்தில் மொழி பெயர்ப்பு நூல்களுக்கான தேவையை – அவை இலக்கிய நூல்களாக இருந்தாலும் சரி, அரசியல் நூல்களாக இருந்தாலும் சரி, தமிழ் வாசகப் பரப்பு நாள்தோறும் உணர்ந்து வருகிறது என்பதையே தற்போது ஏராளமான மொழி பெயர்ப்பு நூல்கள் வெளிவருவதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
மொழிபெயர்ப்பு என்பது மூலப்பிரதியின் உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றை எக்காரணத்தைக் கொண்டும் சிதைக்காத்தாக, படைப்புலகம் கோருகின்ற ஆழமும் செறிவும் நிறைந்ததாக, நூற்பிரதியிடமிருந்து தொடர்பற்று விலகிச் செல்லாததாக, அம்மூலப் பிரதியிலுள்ள அனைத்து அன்னிய மொழி சார்ந்த கலாச்சாரத்தையும் இயன்றவரையில் முழுமையாக மொழிபெயர்ப்பிற்குள் கொண்டு வரக் கூடியதாக இருக்கவேண்டும் என்று மொழிபெயர்ப்பு மற்றும் படைப்பிலக்கிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கோயமுத்தூரில் வசிக்கும் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ‘புதிய புத்தகம் பேசுது’ என்கிற இதழுக்கு ஆகஸ்ட் 2011 மாதப் பிரதியில் பேட்டியில் கூறியுள்ளார்.
நன்றி: புதிய புத்தகம் பேசுது- ஆகஸ்ட் 2011
மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள், நிகழ்வுகள் குறித்த கருத்து பரிமாற்ற அரங்கு கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்
.