மணிமேகலையில் கணிதம் 4

சோதனையாக பல முறை முயற்சி செய்து வெளியிடுகின்றேன்.

தூய காரிய ஏதுச் சுபாவம்

ஆயின் “சத்தம் அநித்தம்” என்றல்

பக்கம் “பண்ணப்படுதலால்” எனல் 29-070

பக்க தன்ம வசனம் ஆகும்

தூய காரியம் என்றால் குற்றமற்ற காரியானுமானம் என்று பொருள். சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமம் ஆவதை ஆராயுமிடத்து அது பக்க தன்ம வசனம் எனப்படும்.

‘ஒலி நிலையற்றது’ என்று கூறுதல் (மேற்கோள்) பக்கமாகும்.

எழுப்பப்படுவதால் (ஒலி நிலையற்றது) என்பது பக்க தன்ம வசனமாகும்.

இனி பக்கம் இருவகைப்படும்.

“யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது

அநித்தம் கடம் போல்” என்றல் சபக்கத்

தொடர்ச்சி “யாதொன்று அநித்தம் அல்லாதது

பண்ணப் படாதது ஆகாசம் போல்” எனல்

விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க

சபக்கத் தொடர்ச்சி என்பது, எதெது செய்யப்படுவதோ அது நிலையற்றது குடம் போல் என்று சொல்வதாகும்.

‘எதெது நிலையானதோ அது செய்யப்படாததாகும், வானத்தைப் போல’ என்று சொல்வது விபக்கத் தொடர்ச்சி என்னும் மீட்சி மொழியாகும்.

‘எழுப்பப்படுவதால், ஒலி நிலையற்றது என்ற பக்க தன்ம வசனத்தைத் தொடர்ந்து, செய்யப்படுவதால் என்பதையே பக்கப் பொருளாக நிறுத்திப் பிற பொருட்களின் நிலையற்ற தன்மையைச் சாதித்தல் சபக்கத் தொடர்ச்சி என்றும், சாதிக்கப்பட்ட நிலையற்ற பொருள்களுக்கு மறுதலையாகிய நிலையான பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி ‘செய்யப்படாதன’ என்பதை மறுதலை ஏதுவாக்கி ஏற்ற எடுத்துக்காட்டோடு சாதிப்பதால் விபக்கத் தொடர்ச்சி என்றும் இவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க தன்ம வசனத்தின் மறுதலையாவதால் ‘மீட்சிமொழி’ என்றும் கூறினார். இவ்விபக்கத் தொடர்ச்சி வெதிரேக வசனம் எனப்படும்.

அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது

“இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை” என்றல்

செவ்விய பக்கம் “தோன்றாமையில்” எனல்

பக்க தன்ம வசனம் ஆகும்

காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமையாத (உடன்பாட்டு நிகழ்ச்சி இல்லாத) அநன்னுவய அனுமானத்தால்,

பொருளை உணரும் திறமாவது ‘இவ்வெற்றிடத்தில் குடம் இல்லை’ என்பது.

இது நல்ல பக்க மொழியாகும்.

‘தோன்றாமையால்’ என்னும் ஏது பக்கதன்ம வசனமாகும்.

“இன்மையின் கண்டிலம் முயற்கோடு” என்றல்

அந் நெறிச் சபக்கம் “யாதொன்று உண்டு அது

தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்” எனல்

ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்.

‘யாதொன்று வெளிப்படையாக இல்லையோ அதனைக் காண முடியாது, முயற்கொம்பு போல’ என்பது அ நன்னுவயப் பிரமாண நெறியில் பெறப்படும் சபக்கத் தொடர்ச்சியாகும். ‘ஏது வெளிப்படையாய் உள்ளதோ அதைக் காண முடியும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல’ என்பது அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி ஆகும்.

இவ்வகை ஏது பொருள் சாதிப்பன

“என்னை காரியம் புகை சாதித்தது?” என்னின்

“புகை உள இடத்து நெருப்பு உண்டு” என்னும்

அன்னுவயத்தாலும் “நெருப்பு இலா இடத்துப்

புகை இல்லை” என்னும் வெதிரேகத்தாலும்

புகஈ நெருப்பைச் சாதித்தது

ஏது என்பது சாதனம்.

ஏதுக்கள் இவ்வகையால் பொருளைச் சாதிப்பன.

காரியமாகிய புகையே காரணாமிய நெருப்பைச் சாதித்தது.

அது எவ்வாறு என்றால்,

‘புகை தோன்றுமிடத்தில் நெருப்புள்ளதாம்’ என்ற உடன்பாட்டு நிகழ்ச்சியாலும்

நெருப்பில்லாத விடத்துப் புகை இல்லை என்ற வெதிரேகத்தாலும், (எதிர்மறை உடன் நிகழ்ச்சியாலும்)

புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம்.

சாதித்தது என்னின் 29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான

ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்

மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப

தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்

இவ்வாறு ஏதுப் பொருளைச் சாதிக்கும் என்றால்

நெருப்பின் காரியமாகிய புகையில் உண்டான மேல் எழுந்து செல்லும் குணமும்,

வளைந்து படர்ந்த படலமும் ஆன இரண்டும்

காரணமாகிய நெருப்பிலிருந்து தோன்றி வரும் காரியமாதலால்

மேல் எழுந்து சென்று கறுத்திருப்பனவும்,

மாறுபட்டு படலமாய் படர்ந்திருப்பனவும் நெருப்பைச் சாதிக்க வேண்டுமே?

காரணத்தின் பண்பு காரியத்திற்கும் உண்டு என்பது அளவைவாதிகளின் கருத்து.

அவ்வாறாயின் புகையின் குணங்களான மேனோக்கிச் செல்லலும், படர்ந்திருத்தலும் உடைய

வேறு காரியங்களும் காரணமாகிய நெருப்பைச் சாதிக்க வேண்டுமே என்றார்.

இதனால் காரியம் காரணம் சாதித்ததில் பிழை என்பதைக் காட்டினார்.

அன்னுவயம் சாதிக்கின் “முன்னும்

கழுதையையும் கணிகையையும்

தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து

கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை 29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா”

நெருப்பும் புகையும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கும் உடன்பாட்டு உடன் நிகழ்ச்சிப் பொருளாகிய அந்நுவயத்தால்

பொருள் உண்மை சாதிக்கப்படும் என்றால் முன்பு ஒரு நாள் ஓரிடத்தே கழுதையையையும், கணிகையையும் ஒன்று சேர்ந்திருக்கக்

கண்டவன், பிற்காலத்தில் கழுதை இருப்பக் கண்டவிடத்து, கணிகையும் உடன் இருப்பதாகத் துணிய வேண்டுமே?

அது கூடாதாம்.

இதனால் அந்நுவய அனுமானம் பிழையுடையது என்பதைக் காட்டினார்.

“நெருப்பு

இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்” என்னின்

“நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்

நரி வாலும் இலையா காணப்பட்ட

அதனையே கொண்டு பிறிதோர் இடத்து

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்

அரிதாம்” அதனால் அதுவும் ஆகாது

இனி நெருப்பில்லாத விடத்தில் புகை இல்லையாம் என மேற்கொள்ளும் சிறப்பமைந்த வெதிரேக (எதிர்மறை உடன்பாட்டு நிகழ்ச்சிப் பொருளால்) அனுமானத்தால் பொருள் உண்மை சாதிக்கப் படுமாயின் ஓரிடத்தே கழுதையின் பிடரியில் நாய்வால் இல்லாதிருப்பதோ நரிவாலும் இல்லையாக அவ்வாறு காணப்பட்ட பொருளின் வெதிரேக அறிவு கொண்டு பிறிதோரிடத்தில் நரிவால் இருக்கக் கண்டு நாய்வாலும் உண்டு என அனுமானித்தல் கூடாது. அதனால் அதுவும் பிழையானதாகும்.

பற்றி veeraa1729
கணித பித்து பிடித்த ஒரு தமிழ் ஆர்வலர். சொல்லி கொடுப்பதிலும் கற்பிப்பதிலும் உள்ள உற்சாகம் எனக்கு திருத்துவதில் இல்லை. ஏனெனில் என் பிழைகள் அதிகம். அதை திருத்துவார் யார்?

மறுமொழிகள் இட இயலாது.

Follow

Get every new post delivered to your Inbox.