“ஏலி ஏலி லாமா சபக்தானி!!”

என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களையும் தீர்மானித்தது நான் இல்லை. அடுத்த கட்டத்திற்கான எந்த எதிர்பார்ப்பையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லை. இதனால் எந்த குறிக்கோளும் இன்றி வாழ்ந்து வருகிறேன் என்பது ஒரு கட்டத்தில் நின்று யோசிக்கும்போது வியப்பு வரவில்லை. அச்சம்தான் ஏற்படுகிறது.

என் சிறிய வயதில் எனது வீட்டிற்கு என் தந்தையின் தமக்கை ஆந்திராவிலுள்ள இராஜ முந்திரியில் உள்ள கன்னிமாடத்தில் இருந்து வருடத்திற்கொரு முறை வருவார். ஆம் அவர் இளமையிலேயே கல்யாண வாழ்க்கையை வெறுத்து கல்யாணம் செய்து கொள்ளாமல் துறவறம் பூண்டு அங்கு சென்று வாழ்ந்து வந்தார்.

ஒவ்வொரு முறையும் எனக்கு இரு கதைகள் சொல்வார். ஒன்று ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி. இன்னொன்று புத்திமகுடன் கதை. இரண்டுமே நீண்ட பெருங்கதைகள். கதைக்குள் கதை என்று விரியும் கதையை அழகாக தெளிவாக கோர்வையாக சொல்வார். ஒரு வருடத்திற்குள் அதை மறந்துவிட்டு அல்லது மீண்டும் அவரது வாயிலிருந்து கேட்கும் வாயிலில் மறுபடி மறுபடி கேட்பேன். சலிக்காமல் ஒவ்வொரு முறையும் முதலிலிருந்து சொல்வார். அவர் தங்கியிருக்கும் பத்து பதினைந்து நாட்களுக்கும் இரவில் அவரது தூக்கத்தை நான் தொலைத்து இருக்கிறேன்.

எனக்கு கதை படிக்கவும், விரும்பவும் ஆரம்பித்தது இதனால்தான் என்று நினைக்கிறேன்.

என் வீட்டில் அனைவருக்கும் என் தாய் உட்பட கதை விரும்பிகள். இரண்டு பெரிய (உண்மையிலே மிகப் பெரிய) பெட்டிகளில் அடைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான கதைகளுக்கு அப்போதிலிருந்து நான் அடிமையானேன்.

முதலில் என்னை இராமலிங்க செட்டியார் மேனிலைப் பள்ளியில் சேர்ந்த போது அதுவரை ஐந்தாம் வகுப்பு வரை முதல் இரண்டு ரேங்கில் மட்டும் மாறி மாறி எடுத்துக் கொண்டிருந்தவன் முதல் பருவத் தேர்விலே அறிவியலில் பெயிலானதும் கணிதத்தில் கூட ஒற்றை மதிப்பெண் எடுத்ததும் எனக்கே என் மேல் பயம் ஏற்பட்டது.

எப்படி தேறப் போகிறேன்?

அந்த தேர்வு சமயங்களில் நான் நோய்வாய்பட்டிருந்தேன். அதற்கு காரணம் நான் செய்த தவறுதான். பெரியோர் சொல் கேளாமை. ஆம். அப்போது ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்ததால் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. அப்போதிலிருந்து கண்ணாடி போட ஆரம்பித்தேன்.

அப்போதுதான் என்னோடு முதல் பெஞ்சில் கூடவே உட்கார்ந்திருந்த பாஸ்கரன் என்னை தேற்றினான். வகுப்பிலும் ஆசிரியரிடம் திட்டு, அடி. வீட்டிலும் அம்மாவிடம் அடி, திட்டு. (அப்பா வருத்தப் பட்டார்.)
பாஸ்கரன் மெதுவாக எனக்கு வாழ்க்கையின் சில ரசனைகளை, அழகுகளை காண்பித்தான்.
சமஸ்கிருதம், ஜோசியம், நியூமரலாஜி போன்ற விசயங்களில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போதே தெளிவாக படித்து என்னிடம் விளக்கவும் விவாதம் செய்வதுமாக எனக்கு ஒரு புதிய உலகத்தை காண்பித்தான்.

ஆங்கிலத்தில் மும்பையிலிருந்து ஒபினியன் என்றொரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அதற்கு சந்தா செலுத்தி அதைப் படிக்கச் சொன்னது அவன்தான்.

அதுவரை எனக்கு ஆங்கிலத்தில் பரிச்சயமில்லாத வார்த்தைகள் அப்போது முதல் என்னோடு பேசத் துவங்கியது.

விளையாட்டில் எனக்கு ஆர்வம் ஓரளவுதான். மரக் கிளைகளில் தலை கீழாக தொங்குவதை எனக்கு சொல்லி கொடுத்தவரின் பெயர் மறந்து போய்விட்டது. தினமும் ஒருமுறை தலை கீழாக தொங்குவதை பழக்கமாகக் கொண்டிருந்தேன்.

என் தந்தையிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு உருப்படியான பழக்கம் நேரம் தவறாமை. பள்ளியில் எப்போதும் கேட்டை முதலில் திறப்பவன் நான்தான்.

அந்த பள்ளியில் “punctuality only for railways? No. Also for you.” என்று எழுதி வைத்திருந்த போர்டும், காலையில் ஒலிபெருக்கியில் போடப்படும் பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

மயில்சாமி எனக்கு பழக்கமான போது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.

ஆறாம் வகுப்பு முடியும் தருவாயில் வகுப்பில் ஓடி விளையாடிய போது பெஞ்சு தொடையின் மேல் விழுந்து தொடை எலும்பு முறிந்தது.

எனவே ஆண்டு தேர்வு நடைபெற்ற சமயத்தில் மருத்துவமனையில் இருந்தேன். ஆண்டுத்தேர்வில் முழு புத்தகமும் படித்து எழுதக் கூடிய பிரச்சினையிலிருந்து தப்பித்து விட்டதாக நான் நினைத்தபோது என் நினைப்பில் மண்ணைப் போட்ட புண்ணியவான்கள் இரண்டு பேர்.

ஒன்று மயில்சாமி.

இன்னொன்று என் தாய்.

ஆம். தினமும் என்னை பார்க்க வரும் மயில்சாமியிடமிருந்து கேள்வித்தாளைப் பெற்று மருத்துவ
மனையில் படுத்துக் கொண்டே என்னைத் தேர்வு எழுத வைத்தார் என் தாய். பிறகு அதை என் தந்தையிடம் என் அக்கா பானுமதியிடம் கொடுத்து திருத்த வைத்து மருத்துவ மனையிலேயே திட்டு அர்ச்சனை பெற்றேன்.

அதன்பிறகு கோடை விடுமுறை ஆதலால் வீட்டில் படுத்தபடி இருந்த என்னோடு கதை புத்தகங்கள் பேச ஆரம்பித்தன.

அவற்றை பல முறை படித்ததையும் அவற்றின் பெயர்களையும் அடுத்த இடுகையில்.