நந்தவனத்தில் ஒரு ஆண்டி


எனது நண்பர் திரு.ஜெயானந்தனின் கருத்துக்களை இங்கு பதிவிடுகின்றேன்.

இதற்கான எனது கருத்துக்களும், எதிர்வினைகளும் பின்னர் பதிவிடப்படும்.

இதனைப் படிக்கும் முன்னர், இந்தக் கட்டுரையைப் படித்துவிடுவது நல்லது.

எப்படி அறிவியலைப் பயன்படுத்தும்போது தொழில் நுட்பம் கிடைக்கிறதோ, அப்படி நம் அன்றாடப் புழக்கத்துக்கு வரும் தத்துவங்கள் சமயங்களாக அறிந்து கொள்ளப்படுகின்றன. காரணத்தைத் தெரிந்து கொள்ளாத போதும் சமயச் சடங்குளைக் கடைபிடித்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போது நாம் சடங்குகளுக்குள் சிறைப்படுகிறோம், அறிவீனத்துக்கு இடம் கொடுக்கிறோம். எந்த ஒரு அமைப்பிலும், இயக்கத்திலும், கேள்வி கேட்காமல், புரிந்து கொள்ளாமல், சடங்குக்குக் கட்டுப்படுகிறவர்கள் சர்வாதிகாரத்துக்கு வித்திடுகிறார்கள்.

தேவாலயங்களும் அரசும் இப்படி ஒன்று கூடி சர்வாதிகார ஆட்சி செய்த காரணத்தால்தான் இன்றைக்கு இருக்கிற குழப்பங்கள் உருவாகின. இதற்கு எதிர்வினையாகத்தான் மதச்சார்பின்மை என்ற சிந்தனை உருவானது.

இந்திய தத்துவ ஞான மரபு தனக்கென்று எந்தவிதமான சர்வ வல்லமையும் கோரியதில்லை. அது ஏற்கனவே இருக்கிற தத்துவங்களில் அடையப்படுகிற மாற்றுப் பார்வைகளையும், ஏன், புத்தம் புது தத்துவங்களையும் தன் உள்வாங்கிக் கொள்கிற இயல்புடையதாக இருக்கிறது. அடிப்படை நம்பிக்கைகளின்மேல் கட்டமைக்கப்பட்ட சமயங்கள் இந்த மரபில் கிடையாது. அந்தக் காரணத்தாலேயே இந்து தத்துவ மரபில் வந்தவர்கள் மத அடிப்படைவாதிகளாக இருக்க முடியாது. இந்தியாவில் மதச்சார்பின்மையைப் பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கவோ, ஏற்கவோ முயற்சி செய்யவில்லை. காரணம், எதேச்சாதிகாரக் கட்டுப்பாடுகள் இல்லாத தத்துவ நேறிகளின்வழி அவர்கள் வாழ்ந்து வந்தனர். பௌத்தம், சீக்கியம், ஜைனம் போன்ற உட்பிரிவுகள் பிறந்து, பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல், செழிப்பாகக் கிளைத்தன. இந்தியச் சூழலில் மதச்சார்பின்மை குறித்த விவாதம் எழ வேண்டிய தேவையே இருந்திருக்கவில்லை.

பேரரசுகளுக்கு உரிய பேராசை மற்றும் காலனிய அதிகாரம் இவற்றின் காரணமாக அந்நிய கோட்பாடுகளை பிரச்சாரம் செய்தவர்கள் மேலை நாடுகளிலிருந்து கலைச்சொற்களை இரவல் வாங்க வேண்டி வந்தது. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கும், அவற்றின் அடிப்படைகளுக்கும் பொருத்தமான சூழல்களை அடையாளம் கண்டு அந்தக் கலைச்சொற்களைக் கொண்டு விளக்கம் கொடுக்க வேண்டி வந்தது. காலத்தின் கட்டாயமாக, நாமும் நமக்குப் பொருத்தமில்லாத அந்த குழூஉக்குறிகளைப் பயன்படுத்தலாயினோம். இது போன்ற ஆக்கங்களிலும் விவாதங்களிலும் பெரும்பாலும் கட்டமைப்பு குறித்த அலசல்களும், நிகழ்வுகளின் கால ஓட்ட பகுப்புகளையுமே நாம் பார்க்கிறோம். விளக்கங்களின் வெளிச்சத்தில் ஆதாரங்களை கட்டமைப்பதாகவே கோட்பாடுகளின் இயல்பு இருக்கிறது- கோட்பாடுகள், ஆதாரங்களை முன் வைத்து, அவற்றிலிருந்து உண்மையின் இயல்பை உணரும் திறனுடையனவாக இல்லை. ஆகவேதான் அதன் இயல்பிலேயே தீர்மானிக்க முடியாத தன்மையுடையதாக ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.

மாபெரும் சிந்தனையாளர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு இதைப் பதிவு செய்கிறேன்:

கட்டமைப்பு, காரிய காரணம் போன்ற அற்ப விஷயங்கள் குறித்த விவாதங்கள் படித்தவர்களுக்கு சிரத பயிற்சியாக இருக்கலாம், ஆனால் அவற்றால் கொடானுகோடி மனங்களில் எவ்வித சலனும் ஏற்படப்போவதில்லை”. “மகோன்னதமான தத்துவங்களை அமைப்புகளாக மாற்றி தேவைப்பட்ட அளவுக்கு சேதம் செய்தாகி விட்ட நிலையில் இன்றைய தேவை, சமயத்தைத் தத்துவங்களிலிருந்து பிரித்து, சாமானிய மனிதனுக்கு அவசியமாயிருக்கிற தெளிவை அவனுக்குக் கொடுப்பதுதான். நான் கற்றது, கண்டது, அனுபவத்தால் உணர்ந்தது- இவற்றைக் கொண்டு  எனது இந்நிலை வளர்ந்திருக்கிறது. இதுவும் ஒன்றும் புனிதமானதில்லை. உங்களைப் போன்றவர்களிடம் நான் கற்கும் படிப்பினைகளால் எனது இந்தப் பார்வையும் பின்னாளில் மாறக் கூடும்.

இந்தக் கருத்துக்களைத் தமிழில் மொழிபெயர்த்த நண்பர் பாஸ்கரனுக்கு நன்றி.

பற்றி veeraa1729
கணித பித்து பிடித்த ஒரு தமிழ் ஆர்வலர். சொல்லி கொடுப்பதிலும் கற்பிப்பதிலும் உள்ள உற்சாகம் எனக்கு திருத்துவதில் இல்லை. ஏனெனில் என் பிழைகள் அதிகம். அதை திருத்துவார் யார்?

One Response to நந்தவனத்தில் ஒரு ஆண்டி

  1. natbas says:

    யாரப்பா அந்த ஆண்டி?

    என்னை சொல்கிறீர்களா? 🙂