நந்தவனத்தில் ஒரு ஆண்டி – 3 (அல்லது) எந்திரன் நாம்?

இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் நூற்றுக்கு மூன்று பேர் தவிர ஏனைய அனைவர் காதிலும் குறைந்தது ஒரு கைபேசியாவது இருக்குமாம். அந்த மூன்று பேர் யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், ஆறு வயதுக்குட்பட்டக் குழந்தைகளும் தொண்ணூறு வயதைத் தாண்டிய தாத்தாக்களும் பாட்டிகளும்தான் அவர்கள் என்று தோன்றுகிறது. தனக்குத் தானே விளையாடிக்கொண்டு, தன்னைத் தானே நொந்து கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டிய பிறவிகள் இவர்கள்.

கைபேசி வைத்திருப்பவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு இருபத்தைந்து நிமிடங்கள் தூரத்தில் இருக்கிற யாருடனோ உரையாடுகிறார்கள். குறைவாகப் பேசுகிறவர்கள் கூடுதலாகப் பேசுகிறவர்கள் என்று எல்லாரையும் கலந்து கட்டினால், ஒரு சராசரி இந்தியன் தொலைதொடர்புகளுடன் ஒட்டுறவாட மாதமொன்றுக்கு ஏறத்தாழ இருநூற்றைம்பது ரூபாய் செலவழிக்கிறான்.

கைபேசி அளவுக்கு கணினி இன்னும் நம் வீடுகளுக்குள் நுழையவில்லை. இருந்தாலும்கூட, கைபேசி வைத்திருப்பவர்களில் நூற்றுக்கு பத்து பேர் கணினி மூலம் வைய விரிவு வலைக்காண தொடர்பு (ப்ராட்பேண்ட்) வைத்திருக்கிறார்கள். மிச்சமிருப்பவர்களுக்கும் உலகம் சுருங்கப் போகிறது- அமெரிக்காவில் இருப்பவனும் சரி, ஆப்பிரிக்காவில் இருப்பவனும் சரி, நம் கூப்பிடு தூரத்துக்கு வரவிருக்கிறார்கள். கைபேசி மூலம் இன்டர்நெட்டைப் பயன்படுத்தத் தகுந்த வரைவியக்கங்கள் (அப்ளிகேஷன்கள்) தயாராகிக் கொண்டிருக்கின்றன.

“எங்களுக்கு வாடிக்கையாளராக வரக் கூடியவர்கள் கோடிக்கணக்கான பேர் வளரும் நாடுகளில் இருக்கிறார்கள்,” என்று சொல்கிறார்கள் ஹ்யூலெட்-பாகர்ட் நிறுவனத்தினர். சன் குழுமம் சக்கை போடு போடுவதை ஒட்டி வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாகக் கிடைத்தது போல், இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் ஏதாவதொரு மகராசன் மனது வைத்தாலோ, அல்லது நம் அரசியல் குடும்பங்களில் ஒன்றோடு கை (கை என்றால் சின்னம் இல்லீங்க. இது வேறு கை) கோத்தாலோ, வயிற்றுக்கு இல்லாதவனுக்குக் கூட வாய் கிழியப் பேசுவதற்கு ஒரு கைபேசி கிடைப்பது உறுதி.

உங்களையும் என்னையும் சேர்த்து நம் போன்ற 19369000 பேர் இன்று வலைவிரிவு பழகுதளங்களை (சோஷல் நெட்வர்கிங்) பாவிக்கிறோம். அனைவருக்கும் கைபேசியும் பழகுதளங்களுக்குப் போக இணைப்பும் சாத்தியப்படுமெனில், இந்த எண்ணிக்கை எவ்வளவு உயருமென்று என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை.

நாம எல்லாம் பாசக்கார பயலுவ, சரிதானே?

இல்லை.

நம் நாட்டில் பதினேழு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25,000 பேர் ஆதரவற்ற அனாதைகளாக இருக்கிறார்கள். முதியவர்களில் மூன்றுக்கு ஒருவர் துணையை இழந்து நிற்கின்றனர். அவர்கள் நிலையாவது ஏதோ பரவாயில்லை என்று சொல்கிற மாதிரி இருக்கிறது- முதியோர்களில் பத்துக்கு ஒருவர் உறவென்று சொல்லிக் கொள்ள எவருமின்றி தனித்து நிற்கிறார். இந்தியாவில் நூற்றுக்கு பன்னிருவர் முதியோர். அப்படி என்றால் ஆதரவில்லாமல் துன்பப்படும் முதியவர்களின் எண்ணிக்கையை கணக்கு போட்டுப் பாருங்கள்.

இங்கே சென்னையில் மட்டும் பத்து முதியோர் இல்லங்கள் இருக்கின்றனவாம். கைவிடப்பட்ட முதியோரை கவனித்துக் கொள்ள இவற்றில் இடம் இல்லாததால், தமிழக அரசு படப்பையில் பெரிய அளவில் ஒரு முதியோர் இல்லம் கட்டப் போகிறது.

நான் இன்னும்
கணவனாலும்
குடும்பத்தாலும்
கைவிடப்பட்ட பெண்களைப் பற்றி
என்ன
பேச?

என்ன நடக்கிறது இங்கே? சமூகம் என்ற அமைப்பு இருக்கிறதா, இல்லை அதுவும் ஒழுக்கம், நீதி, நியாயம் போல சிதறி சின்னாபின்னமாகி விட்டதா?

யோசிக்க வேண்டிய கேள்வி.

அதைவிட நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்- நம்மால் என்ன செய்ய முடியும்? ஒரு குழந்தையையோ, அல்லது முதியவரையோ தத்து எடுத்து வீட்டில் வைத்துக் கொள்வது நடக்கிற காரியமா? இதை எல்லாம் அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடலாமா?

நான் ஆங்கிலத்தில ” என் வீட்டுக்கு அருகில் வசிக்க நீ வருவாயா?” என்ற கட்டுரையைப் படித்ததும் இந்த எண்ணங்கள் என் மனதில் தோன்றின.

நம்மைச் சுற்றி எத்தனை வீடுகள், அதில் எத்தனை பேரை நாம் அறிந்திருக்கிறோம்? நம் குடியிருப்பிலேயே எத்தனை பேர் நம் வீட்டுக்கு வந்து நம்மோடு பேசிச் செல்லக் கூடிய நண்பர்களாக இருக்கிறார்கள்? நம்மைச் சுற்றி இருப்பவர்களில் எவரது மரணமாவது நம் மனதில் இழப்பு என்னும் உணர்வை எழுப்புகிறதா?

இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய பதில்.

நம் கண் முன் இருப்பவர்களை ஒட்டியும்கூட ஒத்திசை உணர்வு நம் நெஞ்சங்களில் எழவில்லை எனில், கண்ணுக்குத் தெரியாத அருகில் இல்லாத தூரத்தில் உள்ள கோடானு கோடி ஏழைகளின் துயர் நம்மை எப்படி பாதிக்கும்?

இணையம் மூலம் வையம் நோக்கி விரியும் உறவு வட்டம், நம் வீட்டில் தனி அறையில் முடங்கிக் கிடக்கும் தாத்தாவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதா? வாசலில் கிழிந்த துணியை உடுத்திக் கொண்டு குப்பையோடு குப்பையாக சுருண்டு கிடக்கும் முதியவரை நோக்கி நீளாதா? சாலைகளின் சந்திப்பில் வெளிறிய கைக்குட்டைகளை வைத்துக் கொண்டு, “அண்ணா! அண்ணா!,” என்று கெஞ்சும் வளமை அறியாக் குழந்தைகளைக் காணாதா?

கணிப்பொறி மூலம் நட்பு தேடுபவன், தனது மற்ற பொறிகளை ஏன் முடக்கிக் கொள்கிறான்? அந்த வெள்ளைக்காரர், அண்டை அயல் என்ற உறவுப் பாலம் போட ஒரு வழி கண்டு பிடித்தார். நம் நாட்டில் இன்னும் இந்த உறவுகள் முழுமையாக அழிந்து விடவில்லை. ஆனால் இவற்றின் அவசியத்தை அறிந்தவர்களாய் நாம் இருக்கிறோமா என்பது கேள்விக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது.